Asianet News TamilAsianet News Tamil

குஜராத்தை அலறவிட்டது பஞ்சாப்; 26 ஓட்டங்களில் அபார வெற்றி…

Punjab shattered Gujarat Winning the 26th
punjab shattered-gujarat-winning-the-26th
Author
First Published Apr 24, 2017, 11:38 AM IST


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தை அலறவிட்டது பஞ்சாப் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் ஆம்லா முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசி அதிரடியில் இறங்க, அடுத்த ஓவரில் மனன் வோரா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஷான் மார்ஷ் பவுண்டரியை விரட்டி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஆம்லா, ஆண்ட்ரூ டை வீசிய 6-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். ஷான் மார்ஷும் அதிரடியாக ஆட, 9 ஓவர்களில் 80 ஓட்டங்களை எட்டியது பஞ்சாப்.

பின்னர் கேப்டன் மேக்ஸ்வெல் களமிறங்க, ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 30 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஆம்லா. அகர்வால் வீசிய 14-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களை விளாச, அதே ஓவரில் ஆம்லா ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31, மார்கஸ் ஸ்டானிஸ் 7 ஓட்டங்களில் வெளியேறினர். அக்ஷர் படேல் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34, ரித்திமான் சாஹா 10 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் ஆண்ட்ரூ டை 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய குஜராத் அணியில் பிரென்டன் மெக்கல்லம் 6 ஓட்டங்களில் அவுட்டாக, ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் சுரேஷ் ரெய்னா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஃபிஞ்ச் 13 ஓட்டங்களில் வெளியேற, ரெய்னா 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு வந்தவர்களில் தினேஷ் கார்த்திக் ஒருபுறம் சிறப்பாக ஆட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 9, டுவைன் ஸ்மித் 4, ஆகாஷ்தீப் நாத் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 13.1 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து துவம்சமானது குஜராத்.

இதையடுத்து களம்கண்ட ஆண்ட்ரூ டை 12 பந்துளில் 22 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பாசில் தம்பி களம்புகுந்தார். இதனிடையே தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இதன்பிறகு குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 47 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் நடராஜன், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோர் அபாரமாக பந்துவீச, தினேஷ் கார்த்திக்கால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58, பாசில் தம்பி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா, கரியப்பா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios