ஐபிஎல் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலம் நடந்து முடிந்துவிட்டது. அனைத்து அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிவிட்டனர்.

ஐபிஎல்-லில் சென்னை அணி விளையாடாத இரண்டு சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, இந்த முறை பஞ்சாப் அணி வாங்கியது. 

சென்னை அணிக்கு தோனி, பெங்களூருவுக்கு கோலி, மும்பை அணிக்கு ரோஹித், டெல்லிக்கு காம்பீர், ஹைதராபாத்துக்கு வார்னர் என பெரும்பாலான அணிகளுக்கு கேப்டன்கள் உள்ள நிலையில், அந்த அணிகள் ஐபிஎல்லை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு கேப்டன்கள் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல கொல்கத்தா அணிக்கு கேப்டனாக வாய்ப்பிருந்த கிறிஸ் லின், காயம் காரணமாக ஐபிஎல்லில் விளையாடாத முடியாத சூழல் உருவானதால், கேப்டனை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், யாரை கேப்டனாக நியமிக்கலாம் என அந்த அணி ரசிகர்களிடம் டுவிட்டரில் கருத்து கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதிகப்படியான ஆதரவு தினேஷ் கார்த்திக்கிற்கு இருப்பதால், அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டால், பஞ்சாப் அணிக்கு அஸ்வின் மற்றும் கொல்கத்தாவிற்கு தினேஷ் கார்த்திக் என இரு தமிழர்கள், ஐபிஎல் அணிகளை வழிநடத்துவார்கள்.

தமிழக வீரர்களை சென்னை அணியே புறக்கணித்துவிட்ட நிலையில், பஞ்சாப் அணி அஸ்வினின் திறமையை கருத்தில்கொண்டு கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளது. அதேபோல, கொல்கத்தா அணியின் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்க விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.