இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 35-ஆவது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் 4 இடத்திர்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்ற புனே அணி 12 புள்ளிகளை எட்டியது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 7-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியது புணே.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும் கோலடிக்க முடியவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 63-ஆவது நிமிடத்தில் மும்பையின் டீகோ போர்லான் கொடுத்த கிராஸை கோலடிக்காமல் கோட்டைவிட்டார் வெடாக்ஸ். 78-ஆவது நிமிடத்தில் மும்பைக்கு மீண்டும் ஒரு கோல் வாய்ப்பு கிடைக்க, அதையும் கோட்டைவிட்டது.
ஆட்டம் கடைசிக் கட்டத்தை எட்டியபோது கோலடிப்பதில் தீவிரம் காட்டிய இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கின. 86-ஆவது நிமிடத்தில் டீகோ போர்லானின் கோல் முயற்சியை அசத்தலாக முறியடித்தார் புணே கோல் கீப்பர் இடெல் பீட்.
ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89-ஆவது நிமிடத்தில் கோலடித்தது புணே. புணே வீரர் நாராயணன் தாஸ் பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைக்க, அதை மும்பை கோல் கீப்பர் கோம்ஸ் முன்னேறி வந்து பிடித்தார்.
ஆனால் பந்து அவருடைய கையில் இருந்து நழுவ, அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட புணே வீரர் லிங்டோ மிகத்துல்லியமாக கோலடித்தார். இதனால் புணே 1}0 என்ற கோல் கணக்கில் வென்றது.
