அடிலெய்டு டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற புஜாராவுக்கும் முன்னாள் ஜாம்பவான் டிராவிட்டுக்கும் நிறைய சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்பட்டவர். பல இக்கட்டான சூழல்களில் களத்தில் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். அவரது இடத்தை அவருக்கு பிறகு யாரும் நிரப்பவில்லை, யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், அவருக்கு பிறகு இந்திய அணியில் அதுபோன்றதொரு பேட்டிங்கை ஆடி இந்திய அணியை காப்பவர் புஜாரா.

டிராவிட்டுக்கும் அவருக்கு அடுத்து அவர் இறங்கிய மூன்றாம் வரிசையில் இறங்கி ஓரளவுக்கு அவர் இல்லாத குறையை தீர்த்த புஜாராவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை புஜாரா வென்றார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்த நிலையில், மறுமுனையில் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி சதமடித்த புஜாரா 123 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 71 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். 

15 ஆண்டுகளுக்கு முன்பாக 2003ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் டிராவிட்டால் இந்திய அணி வென்றது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களை குவித்த டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அன்று அடிலெய்டில் நடந்த போட்டியில் டிராவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

அதேபோல 15 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்திய அணியை வெற்றி பெற செய்த புஜாரா ஆட்டநாயகன் ஆனார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு பிசிசிஐ டுவீட் செய்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த போட்டியில் 5000 டெஸ்ட் ரன்களை கடந்தார் புஜாரா. இது அவரது 108வது இன்னிங்ஸ். டிராவிட்டும் தனது 108வது இன்னிங்ஸில்தான் 5000 ரன்களை கடந்தார். 

மேலும் டிராவிட்டை போலவே புஜாராவும் தனது 67வது இன்னிங்ஸில் 3000 ரன்களையும் 84வது இன்னிங்ஸில் 4000 ரன்களையும் பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.