pujara punish south africa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை புஜாரா சோதித்துவிட்டார் என்றே கூறலாம்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது.

ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியும், வாஷ் அவுட் செய்யும் நோக்கில் தென்னாப்பிரிக்க அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் டாஸை வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் நடையைக் கட்ட, 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முரளி விஜயும் ரபாடாவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த இக்கட்டான நிலையில், ஜோடி சேர்ந்த கோலி-புஜாரா இணை நிதானமாக ஆடியது. நிதானமாகவும் அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடிவருகிறார் கோலி. 

ஆனால், புஜாராவோ வெகுநேரமாக தென்னாப்பிரிக்காவின் பந்துகளை எதிர்கொள்ள திணறினார். அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதால் மிகவும் சுதாரிப்பாக இருந்தார் புஜாரா. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள், பெவிலியனுக்கு அருகில் இருந்து ஓடிவந்து பந்துவீச, அசராமல் மிஸ் செய்தே வந்தார் புஜாரா.

53 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, ஒரு ரன்கூட அடிக்கவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க வீரர்கள் அசந்துபோயினர். 54வது பந்தில் புஜாரா முதல் ரன்னை எடுக்க பெவிலியனில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டினர். ரஹானே, தவான் என அனைவருமே சிரித்தனர். புஜாராவே சிரித்தால் என்றால் பாருங்க..

என்னதான் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலும், இதுபோன்றதொரு தண்டனையை அந்த அணியினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.