இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட் கோலிக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தவர் புஜாரா என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விராட் கோலியும் புஜாராவும் திகழ்கின்றனர். சில டெஸ்ட் தொடர்களில் ஒரு தனிப்பட்ட வீரரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 2003-2004 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட், 2014-2015 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி, 2010 ஆஷஸ் தொடரில் அலெஸ்டர் குக், 2013-2014 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆனால் ஒரு வீரர் என்னதான் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினாலும், அவரது இன்னிங்ஸ் எந்தளவிற்கு அந்த அணியின் வெற்றிக்கு உதவுகிறது என்பதை பொறுத்துத்தான் அந்த இன்னிங்ஸிற்கு மதிப்பு. அந்த வகையில், கோலியின் அடையாளமாக திகழும் 2014-2015 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை காட்டிலும் நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் புஜாராவின் ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

2014-2015 ஆஸ்திரேலிய தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களை விளாசினார் கோலி. ஆனால் அந்த சதங்கள் இந்திய அணிக்கு எந்தவித சாதகத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த தொடரில் கோலி சிறப்பாக ஆடியதால் ஆஸ்திரேலிய அணியின் முழு கவனமும் இந்த முறை கோலியின் மீதே இருந்தது. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியர்களை தெறிக்கவிட்டவர் புஜாரா. 

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் புஜாரா 123 ரன்களை குவித்தார். மெல்போர்னில் நடந்த மூன்றாவது போட்டியிலும் சதமடித்த புஜாரா 106 ரன்களை குவித்தார். இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றது என்பதுதான் புஜாராவின் சதங்களில் உள்ள சிறப்பு. அதேபோல சிட்னியில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசிய புஜாரா, 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார். இந்த போட்டியில் இந்திய அணி 622 ரன்களை குவித்தது. 

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை வெற்றி பெறாமல் போட்டி டிராவில் முடிந்தாலும் தொடரை இந்திய அணி தான் வெல்லும். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி இந்த முறை கண்டிப்பாக தொடரை வெல்லப்போகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது புஜாராவின் பேட்டிங்தான். அந்தவகையில் இந்த தொடரில் புஜாராவின் பேட்டிங் வரலாற்றில் இடம்பிடிக்கும். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, 2014-2015 தொடரில் கோலியின் பேட்டிங்கை காட்டிலும் நடப்பு தொடரில் புஜாராவின் பேட்டிங் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. இதற்கு மேல் இந்திய அணி இந்த தொடரை விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்த தொடரில் புஜாரா அடித்த மூன்று சதங்களும் மிக முக்கியமானவை, அவை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அணிக்கு சாதகமான முடிவை பெற்றுத்தந்துள்ளன. இதற்கு முன்னதாக அடிக்கப்பட்ட எந்த சதங்களை விடவும் புஜாராவின் இந்த 3 சதங்கள் முக்கியமானவை. எந்த கேப்டனுக்குமே புஜாரா ஒரு மிகப்பெரிய சொத்துதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது வரிசை மிகவும் முக்கியமான இடம். அந்த வரிசையில் இறங்கி புஜாரா மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தற்போதைய இந்திய அணியில் விராட் கோலிக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தவர் புஜாரா. என்னை பொறுத்தவரையில் இதுதான் புஜாராவின் ஆரம்பம், அடுத்த மூன்றாண்டுகள் அவருக்கு இன்னும் சிறப்பானதாக அமையும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.