இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என இழந்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி வெற்றி பெற்றது. தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தோற்று தொடரை இழந்தது. 

இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் சொல்லும்படியாக ஆடவில்லை. தொடக்க வீரர்களும் 6,7,8வது வரிசை வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இவர்களின் சொதப்பல் தான் தொடரை இழப்பதற்கு காரணம். ஆனால் பவுலர்கள் அவர்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். 

முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத முரளி விஜய், அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 போட்டிகளிலுமே பேட்டிங் சரியாக ஆடாத ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா, 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் நடந்த இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில், இந்திய ஏ அணியில் ஆடிய பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். இதுவரை 14 முதல் தர போட்டிகளில் ஆடி 1418 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 56.72.

அதேபோல மீண்டும் அஷ்வின் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அஷ்வின் முதல் டெஸ்டிற்கு பிறகு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். 

ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மீண்டும் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.