Pro kabaddi update u.p yoda defeated by u-mumba

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 34-வது ஆட்டத்தில் யு.பி யோதா அணியை 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணி வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 34-வது ஆட்டம் உத்திரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே யு.பி.யோதா அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 3-வது நிமிடத்தில் யு-மும்பா கேப்டன் அனுப் குமார் தனது ரைடின் மூலம் தனது அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றார்.

தொடர்ந்து ஆடிய யு.பி.யோதா அணி, 9-வது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் அவுட்டாக்கியதன்மூலம் அந்த அணி 12-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் அனுப் குமாரும், சபீர் பாபுவும் புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 12-15 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது யு-மும்பா.

அடுத்து நடைப்பெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய யு-மும்பா, ஆரம்பத்திலேயே யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கியதன் மூலம் சமன் செய்த யு-மும்பா அணி, முன்னிலை பெற்றது.

யு.பி.யோதா வீரர் ரிஷங்க் தனது ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்று 20-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு இரண்டாவது முறையாக யு-மும்பாவை ஆல் அவுட்டாக்கிய யு.பி.யோதா அணி 30-வது நிமிடத்தில் 29-26 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் சபீர் பாபு, தர்ஷன் ஆகியோரின் ஆட்டத்தால் 34-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது யு-மும்பா. ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது இரண்டாவது முறையாக யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கியது யு-மும்பா அணி.

இதன்மூலம் முன்னிலை பெற்ற யு-மும்பா 37-34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி கண்டது.