புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணியை 29 - 28 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது யு-மும்பா அணி.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் ஐந்தாவது ஆட்டம் ஐதராபாதில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இரு அணிகளும் தங்கள் ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றன. பின்னர் 15-வது நிமிடத்தில் இரு அணிகளும் 8 - 8 என்ற புள்ளிகள் கணக்கில் சமனானது.

பிறகு ஆட்டத்தை தனது வசமாக்கிய அரியாணா தொடர்ந்து சிறப்பாக ஆடி 10 - 8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேறியது. அதே சமயம், கேப்டன் அனுப் குமார் தனது அசத்தலான ரைடால், ஆல் அவுட்டாவதிலிருந்து தப்பியது யு-மும்பா அணி. அதன்படி முதல் பாதி ஆட்டநேர முடிவில் அரியாணா 15 - 11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மட்டுமே தடுமாறிய யு-மும்பா அணி 27-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின்னர் அந்த அணியின் நட்சத்திர ரைடரான காஷிலிங் அடாகே சூப்பர் ரைடு மூலம் மூன்று புள்ளிகளைப் பெற்றார். 30-வது நிமிடத்தில் யு-மும்பா கேப்டன் அனுப் குமார் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 22-20 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதன்பிறகு அரியாணா அணி, கடுமையாகப் போராடினாலும் யு-மும்பாவின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. இறுதியில் யு-மும்பா அணி 29 - 28 என்ற கணக்கில் வெற்றிக் கண்டது.