Pro Kabaddi The Bengal Warriors - Patna Pirates Today Confrontation ...
பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் மோதும் புரோ கபடி சீசன் – 5 போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்று சென்னையில் இன்று நடைபெறுகிறது.
புரோ கபடி சீசன் – 5 போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்று சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் வலுவாக இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத்திடம் தோற்ற பெங்கால் அணி, இந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
அதேசமயத்தில் பாட்னா பைரேட்ஸை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணி தனது முந்தைய சுற்றில் அரியாணா, புனேரி பால்டான் போன்ற வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது.
பெங்கால் அணியைப் பொறுத்தவரை நட்சத்திர ரைடரான மணீந்தர் சிங்தான் அதன் மிகப்பெரிய பலம். அவருடைய ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.
இதுதவிர குன் லீ, தீபக் நர்வால் போன்றோரும் அந்த அணிக்கு ரைடில் பலம் சேர்க்கின்றனர். பின்களத்தைப் பொறுத்தவரையில் சுர்ஜீத் சிங் உள்ளிட்டோரை நம்பியுள்ளது பெங்கால்.
பாட்னாவில் அதன் கேப்டன் பிரதீப் நர்வால்தான் மிகப்பெரிய பலமே. இந்தத் தொடரில் ரைடின் மூலம் இதுவரை 327 புள்ளிகளைக் குவித்துள்ள பிரதீப் நர்வால், இந்த ஆட்டத்திலும் கலக்குவார். இதுதவிர மானு கோயத்தும் ரைடில் பலம் சேர்க்கிறார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, வரும் சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதும்.
