புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 32-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தபாங் டெல்லி அணி அதிர்ச்சித் தோல்வி அளித்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 32-வது ஆட்டம் அகமதாபாதில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே இரு அணிகளும் தங்களின் முதல் ரைடிலேயே புள்ளிகளைப் பெற்றன. முதல் ஐந்து நிமிடங்களின் முடிவில் டெல்லி அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு தமிழ் தலைவாஸ் பின்கள வீரர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட, சூப்பர் டேக்கிள்கள் மூலம் புள்ளிகள் கிடைத்தன.

இதனால் 9-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் டெல்லி அணி அபாரமாக ஆட, 16-வது நிமிடத்தில் மீண்டும் ஸ்கோரை சமன் செய்தது தமிழ் தலைவாஸ்.

20-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியில் இரு வீரர்கள் மட்டுமே எஞ்சியிருக்க, அந்த அணியின் பின்கள வீரர்கள் சூப்பர் டேக்கிள் மூலம் டெல்லி ரைடரை பிடித்தால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 12-12 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் தனது சிறப்பான ரைடுகளின் அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்றியதால் 24-வது நிமிடத்தில் 15-12 என முன்னிலை பெற்றது.

35-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற கணக்கில் முன்னிலை இருந்தபோது டெல்லி வீரர் மீரஜ் சேக் இரு புள்ளிகளைப் பெற்றுத் தர, அந்த அணி சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது.

ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது ஒரு புள்ளிகள் பின்தங்கியிருந்தது டெல்லி. ஆனால் அதன் ரைடர் மீரஜ் சேக், 40 விநாடிகளில் இரு புள்ளிகளைப் பெற, பின்னர் அந்த அணி 30-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதியில் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.

இந்த சீசனில் டெல்லி அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது என்பது கொசுறு தகவல்.