ஐதராபாதில் இன்று தொடங்கும் ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் முதல் நாள், முதல் ஆட்டத்தில் இந்த சீசனில் முதன்முறையாக களமிறங்கும் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் களம் காணுகின்றன. அதேபோன்று இரண்டாவது ஆட்டத்தில் யு-மும்பா அணியும், புணேரி பால்டான் அணியும் எதிர்கொள்கின்றன.

ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு வரை 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில் இந்த முறை தமிழகம், உத்தரப் பிரதேசம், குஜராத், அரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து புதிதாக நான்கு அணிகள் களமிறங்குகின்றன.

இந்த சீசன் மூன்று மாதங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் விளையாடப்படுகின்றன. சென்னை, ஐதராபாத், மும்பை, நாகபுரி, ஆமதாபாத், டெல்லி, ராஞ்சி, கொல்கத்தா, ஹரியாணா, லக்னெள, ஜெய்ப்பூர், புணே ஆகிய 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புணேரி பால்டான், யு-மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

'பி' பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யு.பி.யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா ஐதராபாதில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பாட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், குருசாய் தத், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், அல்லு அரவிந்த், ராம்சரண், ராணா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அக்ஷய் குமார் தேசிய கீதம் பாடுகிறார் என்பதும், போட்டி நடைபெறும் 12 நகரங்களிலும் தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் கொசுறு தகவல்.