Pro Kabaddi Gujarat Fortune Giants awarded to Patna Pirates
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 115-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 115-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே குஜராத் பின்கள வீரர்கள் அசத்தலாக ஆடியதால் பாட்னாவின் முன்னணி ரைடர்களான பிரதீப் நர்வால், மானு கோயத் ஆகியோர் தொடர்ச்சியாக பிடிபட்டனர்.
முதல் 15 நிமிடங்களில் பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால் ஒரு போனஸ் புள்ளியை மட்டுமே பெற்றார். மானு கோயத்தால் இரு புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது.
தொடர்ந்து அபாரமாக ஆடி குஜராத் 12-ஆவது நிமிடத்தில் பாட்னாவை ஆல் ஔட்டாக்கியதால் 13-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது குஜராத்.
அடுத்த இரு நிமிடங்களில் மேலும் மூன்று புள்ளிகளைக் கைப்பற்றிய குஜராத் 16-8 என்ற முன்னிலையை எட்டியது. பிறகு முதல் பாதி ஆட்டநேர முடிவில் குஜராத் 18-12 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் மானு கோயத் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, 24-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்ற குஜராத் 21-15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பிறகு சூப்பர் ரைடு மூலம் மூன்று புள்ளிகளைக் கைப்பற்றிய குஜராத் அணி, ஆல் ஔட்டாவதிலிருந்து தப்பியதன்மூலம் அந்த அணி 24-17 என்ற முன்னிலையை எட்டியது. 28-வது நிமிடத்தில் பாட்னா கேப்டன் பிரதீப் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, குஜராத் ஆல் ஔட்டானது. அப்போது பாட்னா 22-24 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
குஜராத் அணி அடுத்த மூன்று நிமிடங்களில் நான்கு புள்ளிகளைக் கைப்பற்றியது. இறுதியில் குஜராத் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 13-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணி 77 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில் 6-வது தோல்வியைச் சந்தித்துள்ள பாட்னா 67 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.
