விஜய் ஹசாரே தொடரில் தன்னிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை உதிர்த்த முகமது சிராஜின் பந்துவீச்சை வெளுத்து விட்டார் பிரித்வி ஷா. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே சதமடித்த இளம் வீரர் பிரித்வி ஷா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடினார். இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று இன்னிங்ஸ் ஆடிய பிரித்வி ஷா, 237 ரன்களை குவித்தார். 

பயமே இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார் பிரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கிய கையோடு, விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஆடிவருகிறார் பிரித்வி ஷா. 

ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கினார் பிரித்வி ஷா. மும்பை அணியின் பேட்டிங்கின்போது 9வது ஓவரை வீசிய ஹைதராபாத் பவுலர் முகமது சிராஜ், மூன்றாவது பந்தை வீசிவிட்டு பிரித்வியிடம் சில வார்த்தைகளை உதிர்த்தார். 

இதையடுத்து அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளையும் பறக்கவிட்டார் பிரித்வி ஷா. 4வது பந்தை பவுன்சராக வீச, அதை சிக்ஸர் விளாசிய பிரித்வி, உடம்பை நோக்கி பவுன்சராக வீசப்பட்ட அடுத்த பந்தையும் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரி விளாசி அரைசதம் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி, 61 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த போட்டியில் மும்பை அணி வென்றது. 

இளம் வீரர் பிரித்வியை சீண்ட நினைத்து வாங்கி கட்டிக்கொண்டார் முகமது சிராஜ். இது முகமது சிராஜிற்கான அடி அல்ல. இனி பிரித்வியை வம்பிழுக்க நினைக்கும் அனைத்து பவுலர்களுக்குமான அடி.