முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கி மெர்சல் காட்டினார் பிரித்வி ஷா.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அபாரமாக ஆடி சதமடித்தார் பிரித்வி ஷா. அறிமுக போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்தார். எனவே பிரித்வி ஷாவை இரண்டாவது போட்டியில் விரைவில் வீழ்த்த வியூகங்களை வகுத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி.

பிரித்வி ஷாவை வீழ்த்த வியூகங்கள் வகுத்திருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸும் தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்வியின் ஆட்டத்தை பார்க்கையில், இந்த போட்டியில் அந்த வியூகங்கள் எல்லாம் எடுபடாது போல தெரிகிறது. 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று 311 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி முதல் இன்னிங்ஸை முடித்தது. 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் களமிறங்கினர். கடந்த முறை டக் அவுட்டான ராகுல், இந்த முறை முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து நம்பிக்கையை பெற்றார். 

கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ராகுல் 3 ரன்கள் எடுக்க, பேட்டிங் முனைக்கு சென்றார் பிரித்வி. 2 மற்றும் 3வது பந்துகளில் ரன் இல்லை. 4வது பந்தில் பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா, ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசி வெஸ்ட் இண்டீஸை மிரட்டினார். இதையடுத்து முதல் ஓவரிலேயே 15 ரன்களை குவித்தது இந்திய அணி.

ஹோல்டர் வீசிய இரண்டாவது ஓவரிலும் ஒரு பவுண்டரி விளாசினார் பிரித்வி. பிரித்வியை இந்த போட்டியிலாவது விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கையை முதல் இரண்டு ஓவர்களிலேயே சிதைத்தார் பிரித்வி.