வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, சதத்தை நழுவவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அபாரமாக ஆடி சதமடித்தார் பிரித்வி ஷா. அறிமுக போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்த பிரித்வி ஷா, இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடினார். 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று 311 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி முதல் இன்னிங்ஸை முடித்தது. 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியில் டக் அவுட்டான ராகுல், இந்த போட்டியில் நிதானமாக தொடங்கினார். இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் 4 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்த பிரித்வி பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த பிரித்வி ஷா, 53 பந்துகளில் 70 ரன்களை குவித்த நிலையில், வாரிகன் வீசிய மிகவும் சாதாரணமான பந்தில் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதனால் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவரை தொடர்ந்து 10 ரன்களில் புஜாரா ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.