சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றும், சாதனை படைத்தும் அசத்தினார். அவருக்கு பிரதமர் டிவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வலரிவன், மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். 

மேலும், தகுதிச்சுற்றின்போது 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார். இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 

குஜராத்தில் வசிக்கும் இளவேனில், அணிகளுக்கான பிரிவில் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து 2-வது தங்கத்தையும் கைப்பற்றினார்.

போட்டிக்கு பின்னர் அண்மையில் இந்தியாவுக்குத் திரும்பிய இளவேனில் மற்றும் இதர துப்பாக்கிச் சுடுதல் வீரர்களைப் பாராட்டி பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். 

அந்த பாராட்டு ட்வீட்டில் மோடி கூறியது: "இளவேனிலைப் போன்ற விளையாட்டு வீரர்கள், இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருப்பார்கள். சமீபத்தில், அவர் குஜராத்துக்குத் திரும்பியுள்ளார்.  அது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.