President working after 70 What is wrong with BCCI executives

நமது நாட்டின் குடியரசுத் தலைவர் 70 வயதுக்கு மேல் பணிபுரியும்போது, பிசிசிஐ நிர்வாகிகளும் அந்த வயதுக்குப் பிறகு பணிபுரிவதில் என்ன தவறு இருக்கிறது? என்று பிசிசிஐ முன்னாள் மூத்த அதிகாரியான நிரஞ்சன் ஷா கேட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லோதா குழு பரிந்துரைகளில் பிசிசிஐ தரப்புக்கு ஏற்புடையதாக இல்லாத வகையில் இருக்கும் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்ற விசாரணையின்போது பதிலளிக்கும் வகையில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்புக் குழுவை பிசிசிஐ நியமித்துள்ளது.

இதனிடையே, சிறப்புக் குழு உறுப்பினர்களுக்கு தனது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் நிரஞ்சன் ஷா அதில் சிறப்பு விருந்தினராக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், நிரஞ்சன் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

“பிசிசிஐ நிர்வாகிகளின் வயது வரம்பு தொடர்பான லோதா குழு பரிந்துரையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நமது நாட்டின் குடியரசுத் தலைவர் 70 வயதுக்கு மேல் பணிபுரியும்போது, பிசிசிஐ நிர்வாகிகளும் அந்த வயதுக்குப் பிறகு பணிபுரிவதில் என்ன தவறு இருக்கிறது? நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் ஒருவர், உயிருடன் இருக்கும் வரையில் பணிபுரியலாம்.

பிசிசிஐ சிறப்புப் பொதுக் கூட்டத்தின்போது இந்தப் பரிந்துரைகள் குறித்து அதிகம் கலந்து ஆலோசித்தோம். எனது அனுபவத்தால் நான் கூறிய கருத்துக்கள் இந்த சிறப்புக் குழுவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

புது டெல்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிறப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் லோதா குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

'ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை' முறைக்கு தனிப்பட்ட முறையில் நான் எதிரானவன் அல்ல. ஆனால், நாட்டின் பழைமையான கிரிக்கெட் சங்கம் ஒன்றின் வாக்குரிமையை எவ்வாறு பறித்துக் கொள்ள இயலும்? இது மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும் பொருந்தும். இந்திய கிரிக்கெட்டுக்கு அந்தச் சங்கம் அதிகம் பயனளித்துள்ளது.

புதிய உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், மிகப்பெரிய பங்களிப்பு செய்துவரும் மேற்கு மண்டலத்தின் வாக்குரிமை பறிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதேபோல், ஒரு நிர்வாகி ஒரு முறை பொறுப்பு வகிப்பதற்கும், அடுத்த முறை பொறுப்பு வகிப்பதற்கும் இடையே குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதல்ல. அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளிக்கான பயன்தான் என்ன?

இணைச் செயலராக மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகிக்கும் நான், அடுத்த முறை உடனடியாக செயலர் பொறுப்பில் இருக்க வேண்டும். இது இடர்களற்ற மாற்றத்தையும், தொடர்ச்சியையும் உறுதி செய்யும்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் தாக்கல் செய்துள்ள 18 இடைக்கால மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.