Praneeth waiting for to win the world championship

சிங்கப்பூர் ஓபனைத் தொடர்ந்து தாய்லாந்து ஓபனிலும் வாகை சூடிய இந்திய பாட்மிண்டன் வீரர் சாய் பிரணீத் அடுத்து உலக சாம்பியன்ஷிப் பெற காத்திருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்ற சாய் பிரணீத். சிங்கப்பூர் ஓபனைத் தொடர்ந்து தாய்லாந்து ஓபனிலும் வாகை சூடிய பிரணீத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியது:

“ஒரு போட்டியில் பட்டம் வெல்வது எப்போதுமே மிகச்சிறப்பானது. அது முக்கியமானதும்கூட.

சிங்கப்பூர் ஓபனைத் தொடர்ந்து தாய்லாந்து ஓபனிலும் வாகை சூடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது எனது உடற்தகுதி பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஓபனுக்கு முன்னதாக 6 வாரங்கள் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன்பிறகு தாய்லாந்து ஓபன் போட்டிக்காக ஒரு மாதம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அதன் காரணமாகவே எனது உடற்தகுதி மேம்பட்டிருக்கிறது. என்னால் இப்போது சிறப்பாக ஆட முடிகிறது.

பட்டம் வெல்வதற்கு உடற்தகுதிதான் முக்கியம். உடற்தகுதி இல்லாத நிலையில் சிறப்பாக ஆட முடியாது. நான் போதுமான உடற்தகுதியை பெற்றிருக்கும்பட்சத்தில், என்னால் அதிக அளவில் பட்டங்களை வெல்ல முடியும் என நினைக்கிறேன்.

இப்போது எனது பாட்மிண்டன் வாழ்க்கையில் மிகச்சிறப்பான காலக்கட்டத்தில் இருக்கிறேன். சிங்கப்பூர், தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்றிருக்கிறேன். இது எனக்கு மேலும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டி மிக முக்கியமான போட்டியாகும். அதில் விளையாடுவதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

அடுத்ததாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் விளையாடவுள்ளேன். அதன்பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராவதற்கு ஆறு வாரம் கால அவகாசம் உள்ளது. அதுவே போதுமானதாகும்' என்றார்.