இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகிகள் குழுவுக்கான உறுப்பினர்களை, பரிந்துரைப்பதற்கு மத்திய அரசு மற்றும் பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரையும் கொண்ட அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு:
“பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரு தரப்பும் தங்களது பரிந்துரைகளை சீலிடப்பட்ட உரையில் வைத்து வரும் 27-ஆம் தேதிக்குள்ளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனிடையே, பிப்ரவரி முதல் வாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டம் நடைபெறவுள்ளது. அதை கருத்தில் கொண்டு, பிசிசிஐ சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான மூன்று நபர்களின் பெயர்களை பரிந்துரைக்க பிசிசிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும், இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், அதைத் தொடர்ந்த உத்தரவுகளுக்கும் இணங்கியதாக இருக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தது.
