Paris Masters In the second round the players advanced to the next round of Audi ...

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஃபெலிஸியானோ லோபஸ், போர்னா கோரிச், பாப்லோ கியூவாஸ், கைல் எட்மண்ட், டியேகோ ஷ்வார்ட்ஸ்மென் மற்றும் ரிச்சர்டு காஸ்கட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் பிரான்ஸின் ஹியூஜஸ் ஹெர்பர்ட் மற்றும் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ் மோதினர். இதில், லோபஸ் 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

லோபஸ் தனது 3-வது சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் புய்லேவை எதிர்கொள்கிறார்.

அதேபோன்று, குரோஷியாவின் போர்னா கோரிச், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லெனார்டு ஸ்ட்ரஃபை வீழ்த்தினார்.

கோரிச் தனது 3-வது சுற்றில் சக நாட்டவரான மரின் சிலிச்சை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் காரென் கசானோவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் வீழ்த்தினார்.

கியூவாஸ் தனது அடுத்த சுற்றில் ஸ்பெயினின் ரமோஸ் வினோலஸை எதிர்கொள்கிறார்.

அதேபோன்று பிரிட்டனின் கைல் எட்மண்ட் 5-7, 7-6(7), 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எவ்ஜெனி டோன்ஸ்கியை வீழ்த்தினார்.

அடுத்த சுற்றில் எட்மண்ட் அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் மோதுகிறார்.

அதேபோல ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மென் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை வீழ்த்தினார்.

ஷ்வார்ட்ஸ்மென் தனது மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.

பிரான்ஸ் வீரரான ரிச்சர்டு காஸ்கட் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெனாய்ட் பேரை வீழ்த்தினார்.

காஸ்கட் தனது மூன்றாவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.