பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என பாகிஸ்தான் அணி வென்றது. 

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதன் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

மூன்றாவது டி20 போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாமின் அரைசதம் மற்றும் ஃபர்கான், ஹஃபீஸின் பங்களிப்பு ஆகியவற்றால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்தது. 

151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், கேரி, ஷார்ட், மேக்ஸ்வெல், மார்ஷ் என யாருமே சோபிக்காததால் 19.1 ஓவரில் 117 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து டி20 தொடரை வென்றது. 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களையுமே தோற்று பரிதாபமாக நாடு திரும்புகிறது ஆஸ்திரேலிய அணி.