பாகிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யாசிர் ஷா, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை எட்டி சாதனை படைத்துள்ளார். 

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனானது. 

இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என நியூசிலாந்து அணி வென்றது. 3வது டெஸ்ட் போட்டி இன்றுதான் முடிவடைந்தது. இந்த போட்டியில்தான் பாகிஸ்தான் ஸ்பின் பவுலர் யாசிர் ஷா, 82 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் யாசிர் ஷா. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் யாசிர் ஷா. 33வது டெஸ்ட் போட்டியிலேயே 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை யாசிர் எட்டியுள்ளார். 

இதன்மூலம் விரைவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை யாசிர் ஷா படைத்துள்ளார். 82 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாரி கிரிம்மெட் என்ற ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் தனது 36வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முன்னாள் ஜாம்பவான்களான முரளிதரன், வார்னே ஆகியோர் முறியடிக்கவில்லை. நடப்பு டெஸ்ட் சுழல் ஜாம்பவனாக திகழும் அஷ்வினும் நிகழ்த்தவில்லை.