ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறிவருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் பொறுப்பான சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதால், ஹஃபீசுடன் ஃபகார் ஜமான் தொடக்க வீரராக களமிறங்கினார்.

கடந்த போட்டியில் சதமடித்த முகமது ஹஃபீஸ், இந்த போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஸ்டார்க்கி பவுலிங்கில் அவுட்டாகி நடையை கட்டினார். இதையடுத்து அசார் அலி 15 ரன்களுக்கு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பவுலிங்கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சோஹைல், ஆசாத் ஷாஃபிக் மற்றும் பாபர் அசாம் ஆகிய மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் நாதன் லயனின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினர். 

இதையடுத்து பாகிஸ்தான் அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஃபகார் ஜமானுடன் அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடிய ஃபகார் ஜமான், அரைசதத்தை நெருங்கியுள்ளார். உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஃபகார் ஜமான் 49 ரன்களுடன் களத்தில் உள்ளார்.