ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னங்ஸில் நிதானமாக ஆடிவருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் முதல் 5 விக்கெட்டுகள் 57 ரன்களுக்கே வீழ்ந்துவிட்ட நிலையில், ஃபகார் ஜமான் மற்றும் சர்ஃப்ராஸ் அகமது பொறுப்பாக ஆடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததை அடுத்து அந்த அணி 282 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதனால் அந்த அணி 145 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸை போல இல்லாமல் நிதானமாக ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் திடீரென மளமளவென பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் சரித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர் ஹஃபீஸ் மட்டுமே 6 ரன்களில் வெளியேறினார். இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஃபகார் ஜமான் அரைசதம் கடந்து, 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு அசார் அலி - சோஹைல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்து வருகிறது. சிறப்பாக ஆடிய அசார் அலி அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 281 ரன்கள் முன்னிலையில் உள்ளது பாகிஸ்தான்.