தோனி மீதான அன்பால் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகர் முகமது பஷீர் இந்திய அணிக்கு ஆதரவளித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இந்தியாவை கடந்து பாகிஸ்தான் உட்பட உலகம் முழுதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தோனியின் ஆட்டத்திறன், கேப்டன்சி திறமை ஆகியவற்றை கடந்து அன்பால் பலரை கவர்ந்துள்ளார். 

அந்த வகையில் தான் பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகர் முகமது பஷீர், இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு இந்தியாவிற்கு ஆதரவளித்துள்ளார். 

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடந்தது. இந்த தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 

துபாயில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அதே ஃப்ளோரில்தான் பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷீரும் தங்கியிருந்திருக்கிறார். போட்டிக்கு முன்னதாக பஷீரின் அறைக்கு சென்ற தோனி, பஷீரிடம் அவரது ஜெர்சியை கொடுத்து, இதோ உங்களுக்காகத்தான் இந்த புது ஜெர்சி. இதை அணிந்துகொண்டு மைதானத்திற்கு வாருங்கள் என்று அந்த ஜெர்சியை கொடுத்துள்ளார். 

தோனியின் இந்த செயலாலும் அவரது அன்பைக் கண்டும் நெகிழ்ந்துபோன பஷீர், தோனியின் ஜெர்சியை அணிந்துகொண்டு வங்கதேசத்திற்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவளித்தார்.