Pakistan defeat for Abu Dhabi for the first time Sri Lanka won by 21 runs ...

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 154.5 ஓவர்களில் 419 ஓட்டங்கள் குவித்தது. தினேஷ் சன்டிமல் ஆட்டமிழக்காமல் 155 ஓட்டங்கள்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 162.3 ஓவர்களில் 422 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அசார் அலி 85 ஓட்டங்கள், ஹாரீஸ் சோஹைல் 76 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 3 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, கடைசி நாளான நேற்று 66.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் 136 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ரங்கனா ஹெராத், தில்ருவான் பெரேரா ஆகியோரின் பந்துவீச்சில் 47.4 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இலங்கை தரப்பில் ஹெராத் 6 விக்கெட்டுகளையும், பெரேரா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக (இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

அபுதாபியில் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் முதல்முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது. 

இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.