Asianet News TamilAsianet News Tamil

ஏற்கனவே வாங்கி கட்டும் கோலி!! இந்த செயலுக்கு என்ன வாங்கி கட்ட போறாரோ..?

no spin bowlers in third test match
no spin bowlers in third test match
Author
First Published Jan 24, 2018, 5:24 PM IST


ஸ்பின் பவுலர் ஒருவர் கூட இல்லாமல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனால் 2-0 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வென்றுவிட்டது. 

இந்த இரண்டு போட்டிகளிலும் கேப்டன் கோலியின் அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்நிய மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் ரஹானேவுக்கு பதிலாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சிறந்த ஓவர்சீஸ் வீரரும் டெஸ்ட் போட்டியின் துணை கேப்டனுமான ரஹானேவை சேர்த்திருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. ஆனால், முதல் போட்டியில் தோற்ற பிறகும் இரண்டாவது போட்டியிலும் ரஹானேவை சேர்க்கவில்லை. பெரிதும் நம்பி களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா, இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டிய புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்டில் இஷாந்த் சர்மாவை சேர்த்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மூன்றாவது போட்டியில் விளையாடும் அணியில், ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லை. ஜோகன்னஸ்பர்க் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் என்பதால், ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 5 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் உத்தி எந்தளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தற்போதைய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாரும் சேவாக், யுவராஜ் சிங் மாதிரிகூட பந்து வீச தெரியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தியின் முடிவு எதிர்மறையாக அமையும் பட்சத்தில் இதற்கும் கோலி மீது விமர்சனங்கள் எழலாம். ஆனால், தனது உத்தி சரிதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கோலி ஜெயித்து காட்டுகிறாரா என்பதையும் பார்ப்போம்..
 

Follow Us:
Download App:
  • android
  • ios