திறமையில் மட்டுமல்லாமல் நல்ல மனதிலும் ராகுல் டிராவிட்டை யாராலும் மிஞ்ச முடியாது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.

அண்மையில் ஜூனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. உலக கோப்பை தொடர் முழுதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதி போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய ஜூனியர் அணி.

இந்த உலக கோப்பைக்கு முந்தைய 2 ஆண்டுகளாக இளம் இந்திய அணியை தயார் செய்தார் ராகுல் டிராவிட். கோப்பையை வென்றவுடன், வீரர்களை விட ராகுல் டிராவிட் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதை உணர்ந்த டிராவிட், என் மீது கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள்; இது அனைவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என பெருந்தன்மையுடன் அனைவரையும் உள்ளடக்கி கூறினார்.

அதுமட்டுமல்லாமல், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும் வீரர்களுக்கு தலா 30 லட்சமும் மற்ற பயிற்சியாளர்களுக்கு 20 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட உடனே ராகுல் டிராவிட் வருத்தம் தெரிவித்தார். இந்த வெற்றி அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்தது. மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமான தொகை பரிசாக வழங்குவது சரியாக இருக்காது. அனைவருக்கும் சமமான தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்காக என்னுடைய பரிசுத் தொகையை விட்டுத்தர தயாராக இருக்கிறேன். ஆனால் அனைவருக்கும் சமமான தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என பெருந்தன்மையுடன் கூறினார்.

டிராவிட்டின் நல்ல மனதைக் கண்டு வியந்த பிசிசிஐ நிர்வாகிகள், அவரது கோரிக்கையை ஏற்றனர். அதன்படி, டிராவிட் உட்பட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. அத்துடன் நில்லாமல், இந்திய அணிக்கு பயிற்சியளித்து நீண்டகாலமாக அணியை உருவாக்கி வந்த நிர்வாகிகளையும் இந்த பரிசுத் தொகைக்குள் பிசிசிஐ உள்ளடக்கியுள்ளது. 

ராகுல் டிராவிட்டின் இந்த செயல், பிசிசிஐ நிர்வாகிகள், மற்ற பயிற்சியாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைத்து தரப்பின் வரவேற்பையும் பெற்றுள்ளது. டிராவிட்டை இவர்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். நெட்டிசன்களும் ராகுல் டிராவிட்டை புகழ்ந்து வருகின்றனர்.