Nitish on our confidence Rana wasted Rohit Sharma complimentary
ஐபிஎல் தொடரில் ராணாவும், பாண்டியாவும் சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில் முடிப்பார்கள் என்று நம்பினோம். எங்களின் நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கவில்லை வெற்றிப் பெற்ற மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது மும்பை.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த மும்பை அணி, வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில் நிதிஷ் ராணா, அர்திக் பாண்டியா ஆகியோரின் அசாத்திய ஆட்டத்தால், மும்பை அணி 19.5 ஓவர்களில் 180 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
ராணா 29 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பாண்டியா 11 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா கூறியது:
"போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிக முக்கியமானது. இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ராணாவும், பாண்டியாவும் சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில் முடிப்பார்கள் என்று நம்பினோம். எங்களின் நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கவில்லை.
நிதிஷ் ராணா, பாண்டியா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தருவது எந்தவொரு அணிக்கும் மிக முக்கியமான விஷயமாகும். இதேபோன்று அவர்கள் இருவரும் மீண்டும் சிறப்பாக ஆடுவார்கள் என நம்புகிறேன்.
அதே வேளையில் எங்கள் அணி இன்னும் நிறைய விஷயங்களில் மேம்பட வேண்டியுள்ளது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். எனவே அடுத்த போட்டிக்கு முன்னதாக டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று தவறுகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
