நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஆட்டம் கொழும்பில் இன்று நடைபெறுகிறது.

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டது இந்தியா. எனவே, இந்த ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று பார்க்கலாம்.

இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுமே அவை மோதிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி கண்டுள்ளன. இலங்கை, ஒட்டுமொத்த ஓட்டங்கள் அடிப்படையில் இந்தியா, வங்கதேசத்தைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. 

இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில், இந்தியா முன்னிலை பெறும். இத்தொடரைப் பொருத்த வரையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோர் தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 

ராகுலை தொடக்க வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா களமிறக்கி, அவர் 4-ஆவதுஇடத்தில் களம் காண வாய்ப்புள்ளது. ரோஹித் அவ்வாறு களம் கண்டால், ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். 

முதல் ஆட்டத்திலேயே இலங்கையிடம் இந்தியா வீழ்ந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்கம் சற்று கவனமாக இருக்க வேண்டியுள்ளது. முதல் 2 ஆட்டங்களிலுமே அரைசதம் கடந்த தவன், அணியின் முக்கிய பலமாகத் தொடருவார். 

அவரை அடுத்து மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் என மிடில் ஆர்டரும் ரன் குவிக்க உதவும். பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜெயதேவ் உனத்கட் சற்று மேம்பட வேண்டிய நிலையில், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் இலங்கை அணி முந்தைய ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி கண்டுள்ளது. அதிலிருந்து மீள முயற்சிக்கும் அந்த அணியின் பேட்டிங்கிற்கு குசல் மென்டிஸ், குசல் பெரேரா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சுக்கு தனஞ்ஜெயா, திசர பெரேரா உள்ளிட்டோர்  உள்ளனர்.

இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா,  வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல்,  விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட்,  முகமது சிராஜ், ரிஷப் பந்த்.

இலங்கை அணியின் விவரம்:

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), சுரங்கா லக்மல், உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, குசல் மென்டிஸ், டாசன் ஷனகா, குசல் ஜனித் பெரேரா,  திசர பெரேரா, ஜீவன் மென்டிஸ், இசுரு உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சோ, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா,  தனஞ்ஜெய டி சில்வா.