ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் முழங்கால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரலில் காயமடைந்த அவர், அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபா கர்மாகர் நேற்று செய்தியாளர்களிடம், "காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. கடந்த 2014-ல் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தேன்.

காயம் ஏற்படாமல் இருந்திருந்தால், ஏப்ரலில் கோல்டு கோஸ்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றிருப்பேன்.

நமது ஜிம்னாஸ்டிக் அணியின் செயல்பாடு மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், காயம் என்பது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். தற்போது அதிலிருந்து மீண்டு எனது பயிற்சியை தொடங்கியுள்ளேன்.

வால்ட் பிரிவில் பிரதானமாக பயிற்சி மேற்கொண்டாலும், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், ஃப்ளோர் ஆகிய பிரிவுகளிலும் பயிற்சி எடுத்து வருகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு.

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸில் வெண்கலம் வென்ற அருணா புத்தா ரெட்டிக்காக பெருமை கொள்கிறேன். 2014-17 வரையிலான காலகட்டத்தில் நாங்கள் ஒன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டோம். கடந்த ஒரு மாதமாக அவர் வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வந்தாலும், தற்போது பதக்கம் வென்ற பிரிவுக்காக அவர் இந்தியாவில் விஷ்வேஷ்வர் நந்தியிடம் பயிற்சி எடுத்திருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.