Asianet News TamilAsianet News Tamil

4வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை ஈசியா வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி.. ஆட்டநாயகன் போல்ட்

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

new zealand win in fourth odi against india
Author
New Zealand, First Published Jan 31, 2019, 11:10 AM IST

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் காயத்திலிருந்து மீளாத தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் இந்த போட்டியில் ஆடினர்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, டிரெண்ட் போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தவான், ரோஹித், ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் போல்ட் வீழ்த்தினார். ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் கோலின் டி கிராண்ட்ஹோம் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

new zealand win in fourth odi against india

33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, 35 ரன்களுக்கு 6வது விக்கெட்டையும் 40 ரன்களுக்கு 7வது விக்கெட்டையும் 55 ரன்களுக்கு 8வது விக்கெட்டாக ஹர்திக் பாண்டியாவையும் இழந்து திணறியது. 9வது விக்கெட்டுக்கு குல்தீப்பும் சாஹலும் இணைந்து 25 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் 15 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக கலீல் அகமது ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. சாஹல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் எடுத்திருந்தார்.  

நியூசிலாந்து அணியின் சார்பில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கோலின் டி கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் ஆஸ்டில் மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

new zealand win in fourth odi against india

இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ரன் கணக்கை தொடங்கிய மார்டின் கப்டில், அடுத்த இரண்டு பந்துகளிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். முதல் மூன்று பந்துகளிலேயே 14 ரன்கள் எடுத்ததை அடுத்து அதிரடியை தொடர நினைத்த கப்டிலை நான்காவது பந்திலேயே புவனேஷ்வர் குமார் வீழ்த்திவிட்டார். 

new zealand win in fourth odi against india

கப்டிலின் விக்கெட்டை அடுத்து நிகோல்ஸுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கப்டிலுக்கு பிறகு நிகோல்ஸ் அதிரடியை தொடர்ந்தார். கேப்டன் வில்லியம்சனை 11 ரன்களில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். இதையடுத்து நிகோல்ஸுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், சாஹலின் பவுலிங்கில் சில சிக்ஸர்களை பறக்கவிட்டு 15வது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். 

வில்லியம்சனின் விக்கெட்டுக்கு பிறகு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட நிகோல்ஸ் - டெய்லர் ஜோடி, 15வது ஓவரில் இலக்கை எட்டியது. நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios