சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாமிடத்திலும் ஜோ ரூட் ஐந்தாமிடத்திலும் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருப்பதால் மூன்றாமிடத்திற்கு பின் தங்கி விட்டார்.

நியூசிலாந்து அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணியை பெருமைப்பட செய்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வரலாறு படைத்தது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் வில்லியம்சன், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் தனது போட்டியாளர்களான விராட் கோலி, ரூட், ஸ்மித் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் ஷாட்கள் குறித்து மனம்திறந்தார். அதை ஏற்கனவே பார்த்தோம். 

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவருக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று மனம் திறந்துள்ளார். தனக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரைத்தான் மிகவும் பிடிக்கும் என வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் வில்லியம்சன் அறிமுகமானார். அந்த போட்டியிலும் அந்த தொடர் முழுவதிலும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.