இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 382 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 307 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 278 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் முதல் இன்னிங்ஸில் 29 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 66 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 4-ஆம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 30 ஓட்டங்கள், டேவிட் மலான் 19 ஓட்டங்களுடன் தொடங்கினர். இருவருமே அரைசதம் கடந்தனர். இதில் மலான் 53 ஓட்டங்கள், ரூட் 54 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் வந்தவர்களில் பென் ஸ்டோக்ஸ் 12 ஓட்டங்கள், ஸ்டூவர்ட் பிராட் 12 ஓட்டங்கள், மார்க் வுட் 9 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினர். 9-வது விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவ் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோது டிக்ளேர் செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது. 

அப்போது அந்த அணி 106.4 ஓவர்களில் 352 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜேக் லீச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

நியூஸிலாந்து தரப்பில் கிரான்ட்ஹோம் 4, போல்ட், வாக்னர் தலா 2, செளதி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து நியூஸிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை ஆடி வருகிறது. அதன்படி, நியூஸிலாந்து, 4-ஆம் நாளான நேற்றைய முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டாம் லதாம் 25 ஓட்டங்கள், ஜீத் ராவல் 17 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர். 

நியூஸிலாந்து வெற்றி பெற இன்னும் 340 ஓட்டங்கள் தேவையிருக்கும் நிலையில், இப்போட்டி இன்றுடன்  முடிவடைவதால் நியூஸிலாந்து விக்கெட்டுகளை தக்க வைக்கும் பட்சத்தில் ஆட்டம் சமன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.