இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கி, போட்டியில் வெற்றியும் கண்டது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணி ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டது. 3-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில், முதல் மூன்று போட்டிகளில் ஆடியதற்கு அப்படியே நேர்மாறாக ஆடியது இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய தொடக்கம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. ஹாமில்டன் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது. அதை நன்கு பயன்படுத்தி அபாரமாக பந்துவீசினார் டிரெண்ட் போல்ட். போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி சரிந்தது. வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. 93 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

 

முதல் 3 போட்டிகளிலும் தோற்ற நியூசிலாந்து அணி, இந்த போட்டியில் அதிரடியான மாற்றங்களுடன் களம் கண்டது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் மூன்று போட்டிகளிலுமே படுமோசமாக சொதப்பியது. ஒரு போட்டியில் கூட கப்டில் - முன்ரோ ஜோடி சோபிக்கவில்லை. இதுவே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்துவந்தது. இந்நிலையில், நான்காவது போட்டியில் முன்ரோவை அதிரடியாக நீக்கிவிட்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிகோல்ஸை கப்டிலுடன் தொடக்க வீரராக களமிறக்கியது நியூசிலாந்து அணி. அவரும் நன்றாகவே ஆடினார். விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் வரை களத்தில் இருந்தார் நிகோல்ஸ். 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. இஷ் சோதிக்கு பதிலாக ஆஸ்டில், பிரேஸ்வெல்லுக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். முன்ரோவுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிகோல்ஸ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டதை அடுத்து மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் கோலின் டி கிராண்ட்ஹோமை அணியில் சேர்த்தனர். ஃபெர்குசனுக்கு பதிலாக மாட் ஹென்ரி அணியில் சேர்க்கப்பட்டார்.