நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அந்த அணியின் முதல் 4 விக்கெட்டுகளை முதல் பவர்பிளேயிலேயே வீழ்த்திவிட்டது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்களாக சேஃபெர்ட்டும் முன்ரோவும் களமிறங்கினர். கடந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, இந்திய அணியை மிரளவிட்ட சேஃபெர்ட்டை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. அந்த பணியை செவ்வனே செய்தனர். முதல் இரண்டு ஓவர்களில் சேஃபெர்ட்டை அடித்து ஆடவிடாமல் கட்டுப்படுத்தினர். புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும் இர்னடாவது பந்தில் சிக்ஸரும் விளாசிய சேஃபெர்ட்டை மூன்றாவது பந்தில் அவுட்டாக்கினார் புவனேஷ்வர் குமார். 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார் சேஃபெர்ட். 

இதையடுத்து குருணல் பாண்டியா வீசிய 6வது ஓவரின் இரண்டாவது பந்தில் முன்ரோவையும் கடைசி பந்தில் மிட்செலையும் வீழ்த்தினார் குருணல். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 7வது ஓவரை சாஹல் வீச, மீண்டும் 8வது ஓவரை வீசிய குருணல் பாண்டியா, அந்த ஓவரின் 5வது பந்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை வீழ்த்தினார். 17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வில்லியம்சன் வெளியேறினார். இதையடுத்து ரோஸ் டெய்லருடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 50 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.