இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
 
டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்தில் ஜோஸ் பட்லர் மட்டும் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 79 ஓட்டங்கள் விளாசினார்.

ஜோ ரூட் 71 ஓட்டங்கள் , ஜேசன் ராய் 49 ஓட்டங்கள் , மொயீன் அலி 28 ஓட்டங்கள் , பென் ஸ்டோக்ஸ் 12 ஓட்டங்கள் , கிறிஸ் வோக்ஸ் 11 ஓட்டங்கள் சேர்த்தனர்.

கேப்டன் இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர். டேவிட் வில்லே 11 ஓட்டங்களுடனும், டாம் கரன் ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர், ஐஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். காலின் மன்ரோ ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் நியூஸிலாந்து இன்னிங்ஸில் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக சதம் கடந்து 12 பவுண்டரிகள் உள்பட 113 ஓட்டங்கள் விளாசினார். டாம் லதாமும் 79 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஸ்கோரை அதிகப்படுத்தினார்.

மார்ட்டின் கப்டில் 13 ஓட்டங்கள் சேர்க்க, காலின் மன்ரோ, கேப்டன் கேன் வில்லியம்சன், கிரான்ட்ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர். ஹென்ரி நிகோலஸ் டக் அவுட் ஆனார்.

மிட்செல் சேன்ட்னர் 45 ஓட்டங்கள் , டிம் சௌதி 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டேவிட் வில்லே, டாம் கரன், ஆதில் ரஷீத் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
 
இந்த வெற்றியின்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.