ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரஹானே, முரளி விஜய், பார்த்திவ் படேல், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகிய 5 வீரர்களும் இந்தியா ஏ அணியில் ஆடிவருகின்றனர். 

முதல் போட்டி நேற்று முன் தினம் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து தொடரில் பாதியில் நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்ட முரளி விஜய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவனில் இடம்பிடிக்கும் முனைப்பில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை பயன்படுத்திக்கொள்ளாமல் சொற்ப ரன்களில் வெளியேறினார். கேப்டன் ரஹானேவும் ஏமாற்றினார். 

ஆனால் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல், தமிழக வீரர் விஜய் சங்கர் ஆகிய 5 பேரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் கிருஷ்ணப்பா கௌதமும் சிறப்பாக ஆட, இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 467 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து ஏ அணி வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் ஹமீஷ் ரூதர்ஃபோர்டு அபாரமாக ஆடி சதமடித்தார். மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். டேன் கிளீவர், செத் ரேன்ஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். வில் யங் மற்றும் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் அரைசதத்தை முறையே 1 மற்றும் 2 ரன்களில் தவறவிட்டனர். நியூசிலாந்து ஏ வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இந்திய அணிக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்து ஏ அணி வீரர்கள் பேட்டிங் ஆடினர். இதையடுத்து 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜயும் பிரித்வி ஷாவும் களத்தில் உள்ளனர்.