new records in second test match against srilanka

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்தனர்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார ஆட்டத்தால், இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்திய இந்திய அணி வீரர்கள், பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்தனர்.

புஜாராவின் சாதனை:

முதல் டெஸ்டில் 5 நாட்களும் பேட்டிங் ஆடிய புஜாரா, இரண்டாவது டெஸ்டிலும் முதல் 3 நாட்களும் தொடர்ச்சியாக பேட்டிங் ஆடினார். அதன்மூலம் டெஸ்டில் தொடர்ச்சியாக 8 நாட்கள் ஆடிய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்தார்.

கேப்டன் கோலியின் சாதனை:

இந்த போட்டியில் தனது அபார பேட்டிங்கால், இரட்டை சதம் விளாசி, மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்தார் விராட் கோலி. இது அவரது 5வது இரட்டை சதமாகும். இந்த போட்டியில் கோலி அடித்த சதம், இந்த ஆண்டில் அவர் அடித்த 10வது சதமாகும். இதன்மூலம் ஒரு ஆண்டில், அதிகமான சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன், ஒரு ஆண்டில் ரிக்கி பாண்டிங் 9 சதங்கள் அடித்ததே அதிகமானதாக இருந்தது.

அஷ்வினின் சாதனை:

இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் தனது 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். இந்த போட்டி அஷ்வினுக்கு 54வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் குறைந்த டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் லில்லி, 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

வரலாற்று படுதோல்வி:

மேலும் டெஸ்ட் வரலாற்றில் இலங்கை அணியின் மிகப்பெரிய தோல்வி இதுதான். இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முன், இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் கடந்த 2001-ல் தோற்றதே இலங்கை அணியின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. அதை பின்னுக்குத்தள்ளி இலங்கைக்கு மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி இந்த போட்டியில் கொடுத்துள்ளது.

இப்படியாக இந்தியாவிற்கு சாதனைகளைக் குவித்து கொடுத்த போட்டியாக நாக்பூர் டெஸ்ட் அமைந்தது.