இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள், டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான சர்வதேச தொடரையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர்.

தனிப்பட்ட முறையில் வீரராகவும் தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்நிலையில், இன்றைய டி20 போட்டியிலும் தோனிக்காக ஒரு சாதனை காத்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் ஒரு கேட்ச் பிடித்தால் சர்வதேச டி20 போட்டியில் 50 கேட்ச்களை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைப்பார். தோனிக்கு அடுத்தபடியாக விண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ராம்தின் 32 கேட்ச்களுடனும் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் 30 கேட்ச்களுடனும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

சர்வதேச டி20 போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்த விக்கெட் கீப்பர்களில் 79 பேரை ஆட்டமிழக்க செய்த தோனி முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக 60 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக ஸ்டம்பிங்குகள் செய்ததில் 32 ஸ்டம்பிங்குகளுடன் அக்மல் முதலிடத்திலும் 29 ஸ்டம்பிங்குகளுடன் தோனி இரண்டாமிடத்திலும் உள்ளார்.

விரைவில் தோனி இதிலும் முதலிடம் பிடிப்பார்.