வெஸ்ட் இண்டீஸ் அணியை கிண்டலடிப்பதாக நினைத்து நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபாலோ ஆன் பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களுக்கு அதிலும் ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ஓவர்கள் ஆடியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே மொத்தம் 99 ஓவர்கள் மட்டுமே ஆடியது. 99 ஓவர்களில் இரண்டு முறை ஆல் அவுட்டானது. போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துவிட்டது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை கிண்டல் செய்யும் விதமாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு டுவீட் செய்திருந்தார். அதில், டெஸ்ட் போட்டியை எந்த டிவியிலும் பார்க்க முடியவில்லை. போட்டி முடிந்துவிட்டதா? என்று வெஸ்ட் இண்டீஸை கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். 

இதைக் கண்ட ரசிகர்களும் நெட்டிசன்களும் ரசல் அர்னால்டுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இலங்கையை விட வெஸ்ட் இண்டீஸ் நல்ல அணி தான் என்றும் இலங்கையில் உள்ள கிராமங்களில் டிவி எடுக்காதா என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸை கிண்டலடிப்பதாக நினைத்து அர்னால்டு வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார்.