வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆடிவரும் அவர்கள், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில், டெஸ்ட் தொடர் மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. 

அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். இவர்கள் இரண்டு போட்டிகளிலுமே பெரியளவில் சோபிக்கவில்லை. இவர்களின் ஓவர்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர். இரண்டாவது போட்டியின் கடைசி ஓவர்களில் ஷமியாவது பந்துகளை மாறி மாறி வீசி பேட்ஸ்மேன்களை குழப்பினார். உமேஷ் யாதவ் அப்போதும் ரன்களை வாரிவழங்கினார். 

அதனால் முதல் இரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது. அதனால் எஞ்சிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில், எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் சேர்க்கப்படுவதற்காக முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரின் பந்துவீச்சையுமே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து ஆடினர். ஆனால் எதனடிப்படையில் ஷமி நீக்கப்பட்டார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சொல்லப்போனால், இரண்டாவது போட்டியில் இக்கட்டான கடைசி நேரத்தில் ஷமி கட்டுக்கோப்பாக ரன் கொடுக்காமல் பந்துவீசினார். ஆனால் கடைசி நேரத்திலும் உமேஷ் யாதவ் ரன்களை வாரி வழங்கினார். இருவரில் ஒருவரை நீக்க வேண்டும் என்றால் உமேஷ் யாதவை நீக்கியிருக்கலாமே என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இருவருமே ரன்களை வழங்கினர். ஆனால் முக்கியமான நேரத்தில் ஷமி தானே நன்றாக போட்டார். அப்படியென்றால் அவரை அணியில் வைத்துக்கொண்டு உமேஷ் யாதவை தானே நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விவாதமாக உருவெடுத்துள்ளது.