National Basketball Tournament Kerala Team won Champion

கோவையில் நடைபெற்ற மின்சார வாரிய அணிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் தமிழகத்தை வீழ்த்தி கேரள மின்வாரிய அணி பட்டம் வென்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அகில இந்திய அளவிலான மின் வாரியங்களுக்கு இடையிலான 42-ஆவது கூடைப்பந்துப் போட்டி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் தமிழகம், பஞ்சாப், கேரளம், தெலங்கானா, ஹரியாணா, கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கேரள மின்வாரிய அணி 94-71 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

கேரள அணியின் ஜஸ்டின் ஜி.நாயர் அதிகபட்சமாக 29 புள்ளிகளும், நிதின் டூயல் ஸ்டீபன் 20 புள்ளிகளும் வென்றனர்.

தமிழக மின்வாரிய அணியின் கே.ஆர்.சிவகுமார் அதிகபட்சமாக 26 புள்ளிகளைச் சேர்த்தார்.

பின்னர், மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் - ஹரியாணா அணிகள் மோதியதில் பஞ்சாப் 56-44 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார். கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் தா.ஆல்தொரை வரவேற்றார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக மின்வாரியம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் பி.தங்கமணி பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.