National basketball tournament begins today in Coimbatore ...
கோவையில் ஆண்களுக்கான 52-ஆவது நாச்சிமுத்து கௌண்டர் கோப்பை, பெண்களுக்கான 16-ஆவது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் சி.என்.அசோக், செயலர் சிரில் இருதயராஜ் கூறியது:
“இந்தாண்டு ஆண்களுக்கான 52-ஆவது நாச்சிமுத்து கௌண்டர் கோப்பை போட்டியில் தேசிய அளவில் முன்னணியில் உள்ள சென்னை வருமான வரித் துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டெல்லி இந்தியன் ஏர்ஃபோர்ஸ், இந்திய இரயில்வே, சி.ஆர்.பி.எஃப்., குஜராத் விளையாட்டு ஆணையம், இந்திய கடற்படை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணி ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சத்துடன் நாச்சிமுத்து கௌண்டர் சுழற்கோப்பையும், 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்படும்.
அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடும் இரு அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
மகளிர் பிரிவில் 16-ஆவது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் செகந்திராபாத் - தெற்கு மத்திய இரயில்வே, சென்னை – தென்னக இரயில்வே, கொல்கத்தா – கிழக்கு இரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், கேரள மின் வாரியம், சத்தீஸ்கர் மாநில அணி, குவாஹாட்டி - வடக்கு எல்லை (ஃபிராண்டியர்) இரயில்வே அணி, கோவை மாவட்ட அணி ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்துடன் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற்கோப்பையும், 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரத்துடன் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.
அரை இறுதியில் வாய்ப்பை இழக்கும் இரு அணிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகள் மே 29-ஆம் தேதி வரை சுழல் முறையில் நடைபெறும்.
பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வு பெறும். போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தினசரி மாலை 5 மணிக்கு நடைபெறும்.
இறுதி ஆட்டம், பரிசளிப்பு விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், கோவை சக்தி குழுமத் தலைவர் எம்.மாணிக்கம், மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் ஜி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்” என்று அவர்கள் கூறினர்.
