National Basketball Championship Winning Champion wins championship
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் - 68 போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் - 68 போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், தமிழகம் - சர்வீசஸ் இடையேயான ஆடவர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் திறமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். முதல் பாதியில் தமிழக அணி 41-40 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் திறமையாக விளையாடி 'யாருக்கு வெற்றி? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினர். பல புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த தமிழகம் 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
லீக் ஆட்டங்களில் ஒரு போட்டியில்கூட தமிழக அணி தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய இரயில்வே அணி 100-71 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற இந்திய இரயில்வே அணிக்கு தங்கக் கோப்பையும், ரூ.2 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சத்தீஸ்கர் அணிக்கு ரூ.1 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த கேரள அணிக்கு ரூ.50ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இப்போட்டியின் நிறைவுநாளான நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கினர்.
