விஜய் ஹசாரே தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் ஸ்பின் பவுலர் நதீம்.

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடந்துவருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. 

இதில், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நதீமின் சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 10 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நதீம், 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ராஜஸ்தான் அணி 28.3 ஓவருக்கே 73 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஜார்க்கண்ட் அணி 14.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் 10 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நதீம், ஏ வரிசை கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 1997-98ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக ராகுல் சங்வி, 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அதை நதீம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.