N Srinivasan can not participate in a meeting of the ICC the Supreme Court judgment in the action

பிசிசிஐயின் பிரதிநிதியாக என்.சீனிவாசன் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது.

ஐசிசி கூட்டம் வரும் 23 முதல் 27 வரை துபாயில் நடைபெற உள்ளது. அதில் பிசிசிஐ சார்பில் பங்கேற்க சீனிவாசன் உள்ளிட்டோர் முயற்சித்தனர்.

ஆனால், லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகிக்க முடியாது. என்.சீனிவாசன் 70 வயதைக் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பிசிசிஐயின் பிரதிநிதியாக ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க முடியுமா? என்பதை தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடியது முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு.

இந்த வழக்கை நேற்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, விசாரித்தது.

பின்னர், 'முன்னாள் பிசிசிஐ தலைவரான சீனிவாசன் இரட்டை ஆதாயம் பெறும் பதவிகளை வகித்ததோடு, தனது அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவர் பிசிசிஐயின் பிரதிநிதியாக ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

பிசிசிஐயின் செயல் தலைவர் அமிதாப் செளத்ரி, ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கலாம். அவருடன் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரியும் பங்கேற்கலாம். ராகுல் ஜோரி, தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.