“எனது 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கை இந்த ஆண்டோடு முடிவுக்கு வரலாம்” என்று இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

சென்னை ஓபனில் 17-ஆவது முறையாக களமிறங்கவுள்ள பயஸ், இது தொடர்பாக மேலும் கூறியதாவது: எனது 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கை இந்த ஆண்டோடு முடிவுக்கு வரலாம். 43 வயதிலும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றால், நிச்சயம் நான் ஆசிர்வதிக்கப்பட்ட நபர். இப்போது எனது மகிழ்ச்சிக்காக டென்னிஸ் ஆடி வருகிறேன். எனினும் எதுவும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.

சென்னை ஓபனில் பிரேசிலின் ஆண்ட்ரே சாவுடன் இணைந்து களமிறங்குகிறார். சென்னை ஓபனில் பயஸுடன் இணைந்து விளையாடவுள்ள 11-ஆவது புதிய இணை ஆண்ட்ரே சா ஆவார்.

பயஸ் ஜோடி, போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ளது. சென்னை ஓபன் இரட்டையர் பிரிவில் 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் பயஸ். அதில் முதல் 5 பட்டங்களை மகேஷ் பூபதியுடன் இணைந்து வென்ற பயஸ், 2012-இல் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சுடன் இணைந்து 6-ஆவது பட்டத்தை வென்றார்.