ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முர்ரே தனது 3-ஆவது சுற்றில், உலகின் 32-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் குவெரியுடன் மோதினார். இருவருக்கும் இடையே 2 மணி நேரம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் முர்ரே வெற்றி பெற்றார்.
முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிஸ்சா ஸுவெரெவை சந்திக்க உள்ளார்.
இதனிடையே நடைபெற்ற மற்றொரு 3-ஆவது சுற்றில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார் ஃபெடரர். இந்த ஆட்டத்தில் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வென்றார்.
அடுத்து நடைபெறும் முர்ரே-மிஸ்சா இடையேயான மோதலில் வெல்பவர், ஃபெடரருடன் மோத உள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அந்த ஆட்டத்தில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை எதிர்கொண்ட வாவ்ரிங்கா, 3-6, 6-2, 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
அதேபோல், ஸ்லோவேகியாவின் லூகாஸ் லாக்கோவை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஜப்பானின் கெய் நிஷிகோரி.
பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா தனது 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை 7-6(4), 7-5, 6-7(8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
